பதிவு செய்த நாள்
12
மார்
2025
01:03
பெங்களூரு, கே.ஆர்., புரம் மார்க்கெட் அருகில் உள்ளது மலை கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமணா கோவில். பெங்களூரு நகரில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. 17ம் நூற்றாண்டில், மைசூரை ஆட்சி செய்த சிக்க தேவராச உடையாரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. திராவிடம் மற்றும் விஜயபுரா கட்டட கலையில் கட்டப்பட்டது.
முதலில் அரச குடும்பத்தின் வசிப்பிடமாக இருந்தது. பின்னர், திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் கோவில் பல முன்னேற்றங்களை கண்டது. மேலும், அக்காலத்தில் பல அரச விழாக்கள், முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலின் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமணா பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உடன், பத்மாவதி தாயாரும் இருக்கிறார். பக்தர்கள் வேண்டும் வரங்களை இவர்கள் அளிக்கின்றனர். கோவிலில், பெரிய அளவிலான ஆஞ்சநேயரின் சிலையும் உள்ளது. நகருக்குள் உள்ள கோவிலாக இருந்தாலும் பிரமாண்டமாகவும், விசாலமாகவும் காட்சி அளிக்கிறது. கோவிலில் உள்ள துாண்கள் பழமையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது. புராண கதைகளில் வரும் யாளி எனும் விலங்கின் உருவம் துாண்களில் செதுக்கப்பட்டுள்ளன. கருவறை, சுவர்களில் ஓவியங்கள் ஏதும் காணப்படவில்லை. மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள கோவில்கள் கட்டப்பட்ட பாணியிலே இதுவும் உள்ளது. இந்த கட்டட கலையை பார்ப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆங்கிலேயர்கள் நடத்திய போரின் போது, கோவிலின் மீது பீரங்கி குண்டு ஒன்று விழுந்துள்ளது. அப்போது, கோவிலுன் முன் இருக்கும் கொடி கம்பத்தின் மீது குண்டு விழுந்தது. இதனால், கோவிலுக்கு எந்த சேதமும் ஆகவில்லை என கூறப்படுகிறது. தினமும் இரு வேளைகள் பூஜை நடக்கிறது. காலை 11:00 மணி அளவில் மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படும். பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கோவிலில் பிரம்மோத்சவம், வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலுக்கு பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளது. பெண்கள் – புடவை, சுடிதார்; ஆண்கள் – குர்தா, பைஜமா, பேன்ட், சட்டை போன்ற உடைகளையே அணிந்து வர வேண்டும். – நமது நிருபர் –