பதிவு செய்த நாள்
12
மார்
2025
03:03
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று (12ம் தேதி) குண்டம் திருவிழா நடந்தது. கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி, கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் போன்றவக்களுடன் துவங்கியது. மார்ச் 4ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. 5ம் தேதி, அம்மன் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. 7ம் தேதி, திருவிளக்கு பூஜை மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 10ம் தேதி, சக்தி விந்தை ஆற்றில் இருந்து கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு மற்றும் அம்மன் பூ பள்ளத்தில் திருவீதி உலா அழைத்து வரப்பட்டது. 11ம் தேதி, மாவிளக்கு அலங்கார பூஜை, மாவிளக்கு அழைத்து வருதல், கோவில் மண்டபம் பூ அலங்காரம், மற்றும் பொங்கல் விழா, குண்டம் திறப்பு, குண்டத்திற்கு பூ போடும் நிகழ்வு நடந்தது. இன்று 12ம் தேதி, குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. இதில், ஆண்கள் பெண்கள் என சுவாமியை வேண்டி "ஓம் சக்தி பராசக்தி" கோஷங்கள் முழங்க குண்டம் இறங்கி வழிபட்டனர். தொடர்ந்து அக்னி அபிஷேகம் நடந்தது. நாளை 13ம் தேதி, காலை 7:00 மணிக்கு, மஞ்சள் நீராடும் நிகழ்வு நடக்கிறது. 14ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.