பதிவு செய்த நாள்
12
மார்
2025
06:03
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மாசி மக திருவிழா மார்ச் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை பிரியாவிடையுடன் கரிகாலசோழீஸ்வரர் உலா வந்தார். விழாவின் ஒன்பதாம் நாளான இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் கரிகாலசோழீஸ்வரர், சிவகாமி அம்மன், விநாயகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
இன்று காலை 10:40 மணிக்கு அனைத்து பக்தர்களும் தேர் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி, காலை 11:10 மணிக்கு நிலையை அடைந்தது. முன்னதாக தேர் புறப்படும் போது தேர் சக்கரத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். பக்தர்கள் ஒன்றாக கொட்டும் மழைக்கு இடையே ஆர்வமுடன் தேரை இழுத்து சென்றனர். பத்தாம் நாளான நாளை காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், யாகசாலை தீபாராதனை, கலச அபிஷேகம், மூலவர் தீபாராதனை நடைபெறும். இரவு 7:15 மணிக்கு சுவாமி புறப்பாடுடன் கொடிஇறக்கப்பட்டு மாசி திருவிழா நிறைவு பெறும். தேவஸ்தான கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா உட்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
லட்சார்ச்சனை பூஜை: சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடி அன்னை வீரமாகாளியம்மன் கோயிலில் மாசி மக தினத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. இன்று காலை கணபதி, லட்சுமி, துர்கா, சுதர்சன, நவகிரக, மூலமந்திர ஜப ேஹாமம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு லட்சார்ச்சனை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.