100 ஆண்டுகளுக்கு பின் நாமக்கல் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா கோலாகலம்
பதிவு செய்த நாள்
13
மார் 2025 10:03
நாமக்கல்; நாமக்கல் கமலாலய குளத்தில், நுாறு ஆண்டுகளுக்கு பின், தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமிகளின், உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாமக்கல் மாநகரில், மூர்த்தி, தீர்த்தம், தலம் என, மூன்று வகை சிறப்புகளோடு, புராதன சிறப்பு மிக்க மலைக்கோட்டையை ஒட்டி, குடவரை கோவிலாக நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி, அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. ஆஞ்சநேயர் சுவாமி, நாமகிரி தாயாரை முதலில் கண்ட இடமாக, இந்த கமலாலய குளம் திகழ்வதாக, புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், நுாறு ஆண்டுகளுக்கு பின், நேற்று கமலாலய குளத்தில், ‘தெப்ப திருவிழா’ கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், மலைக்கோட்டை அருகே அமைந்துள்ள கமலாலய குளம் துாய்மைப்படுத்தப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது. தொடர்ந்து, நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமிகளின், உற்சவ மூர்த்திகளுக்கு நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குளம் அருகே உள்ள நாமகிரி தாயார் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டது. பின், கமலாலய குளத்தில், மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தெப்ப திருவிழா நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், தெப்பத்தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, கமலாலய குளத்தின் மையப்பகுதியில் உள்ள நீராளி மண்டபத்தை, தெப்பம், மூன்று முறை சுற்றி வந்தது. குளத்தை சுற்றியிருந்த திரளான பக்தர்கள், தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகளை வழிபட்டனர். மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
|