திருப்பூர்; மாசி மாத சதுர்த்தசி நாளான நேற்று, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு, மகா அபிஷேக பூஜை நடந்தது. சிவாலயங்களில் அருள்புரியும் ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடக்கின்றன. ஆருத்ரா தரிசனம், சித்திரை மாத திருவோண நட்சத்திர நாள், ஆனி மாதம் வரும் உத்தர நட்சத்திர நாள், மாசி, ஆவணி, புரட்டாசி மாத சதுர்த்தசி நாட்கள் என, ஆண்டுக்கு ஆறுமுறை அபிஷேகம் நடக்கிறது. அவ்வகையில், மாசி மாத சதுர்த்தசி நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று மகா அபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள், கனக சபை மண்டபத்தில் வைத்து, ஸ்ரீநடராஜர் – சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 12:30 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பல்வகை மலர்களால் அர்ச்சனை செய்த சிவனடியார்கள், வேத மந்திரங்களை ஓதி பூஜைகள் நடத்தினர். ஓதுவாமூர்த்திகள், பன்னிரு திருமுறை பதிகங்களை பாராயணம் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். l இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.