பதிவு செய்த நாள்
13
மார்
2025
02:03
திருவனந்தபுரம்; ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்தக் கோயிலின் பொங்கல் விழாவில் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதனால், திருவனந்தபுரம் நகரம் புகை மூட்டத்தில் சிக்கியது. மதுரையை எரித்த கண்ணகி, கொடுங்கல்லூர் செல்லும் வழியில், திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் தங்கினார். அன்று இரவு, இப்பகுதி முதியவர் ஒருவர் கனவில் வந்து தனக்கு, இங்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கிள்ளியாற்றின் கரையில் கோவில் கட்டப்பட்டு, இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் என, பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி கொண்டிருக்கிறது. இங்கு, மாசி மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தில், அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தி, பொங்கல் விழா தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாவது நாளில் பூரம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணையும் நாளில் பொங்கல் வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு கோவிலின் முன்புறம் உள்ள அடுப்பில், கோவில் மேல்சாந்தி தீ வளர்த்ததும், ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, பெண்கள் அனைவரும் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி 4 கி.மீ., சுற்றளவில் ரோடுகளிலும், வீடுகளிலும், பஸ் நிறுத்தங்களிலும் பெண்கள் பொங்கலிட்டனர். இதனால், திருவனந்தபுரம் நகரம் புகைமூட்டமாக காட்சியளித்தது. பொங்கல் நிகழ்ச்சியில், கேரளா, தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.