பதிவு செய்த நாள்
13
மார்
2025
02:03
மானாமதுரை; மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசி மக தெப்ப உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மக உற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் தாயமங்கலம் ரோடு, பட்டரை தெரு, பழைய தபால் ஆபீஸ் தெரு, மாரியம்மன் கோயில் தெரு,சுந்தரபுரம் கடைவீதி,குறிஞ்சிநகர்,முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா சென்று வந்த பின்னர் கோயிலின் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு எழுந்தருளினார்.இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தை சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர். விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.