பதிவு செய்த நாள்
08
டிச
2012
10:12
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், எவ்வித உத்தரவுமின்றி, பதிலி அர்ச்சகராக பணியாற்றி வரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.சேலம், சுகவனேஸ்வரர் கோவில், புராண கால சிறப்பு பெற்றதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் மிகவும் பிரஸித்தி பெற்றது. கோவிலுக்கு, தினம் தோறும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ காலங்களில், ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும், பக்தர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.சுகவனேஸ்வரர் கோவிலில், மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி, இரட்டை வலம்புரி விநாயகர் சன்னதி, சுப்பிரமணிய ஸ்வாமி சன்னதி அமைந்துள்ளது. ஸ்வாமி சன்னதிகளில், 10 அர்ச்சகர்கள், அபிஷேகம், தீபாராதனை மற்றும் பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலான அர்ச்சகர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, தற்போது, கோவிலில் ஒரு அர்ச்சகரும், இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியின்றி, ஓய்வு பெற்ற அர்ச்சகர் பணியிடத்தில், பதிலி அர்ச்சகராக பத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியõற்றி வருகின்றனர். இவ்வாறு, அனுமதியில்லாமல் பதிலி அர்ச்சகராக பணியில் உள்ளவர்களை, கோவில் நிர்வாகத்தினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கோவில் மூலவர் சன்னதியில், அர்ச்சகர்கள், அபிஷேகம், ஆராதனை, பூஜைகளில் ஈடுபடுவதும், வி.ஐ.பி., தரிசனம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர். மூலவர் சன்னிதனாம் தவிர்த்து, முருகன், விநாயகர், அம்மன் சன்னிதனாங்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தீபாராதனை காட்டவோ, விபூதி, குங்குமம் அளிக்கவோ அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மட்டுமே மூலவர் தவிர்த்த பிற சன்னிதானங்களில் அர்ச்சகர்களை காண முடிகிறது. மேலும், அர்ச்சகர்கள் முறையான நேரத்துக்கு பணிக்கு வந்து செல்வதில் காலவரைமுறையை கடைபிடிப்பதில்லை.நினைத்த நேரத்துக்கு கோவிலுக்கு அர்ச்சகர்கள் வந்து செல்வதாகவும், முறையான அனுமதியின்றி பதிலி அர்ச்சகராக பணியாற்றி வருவது குறித்தும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலனுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது.அதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், "சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், பதிலி அர்ச்சகர்கள் பணியாற்றி வருவது சம்பந்தமாக நேரில் சென்று, விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசிக்கு உத்தரவிட்டுள்ளார்.