பதிவு செய்த நாள்
08
டிச
2012
10:12
ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க தடையாக இருந்த, ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஒட்டன்சத்திரத்தில் துவங்கியது. பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை, தேனி, காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ரோடுகள் வழியாக பழநியை நோக்கி வந்த போதிலும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே ரோட்டில் (ஒட்டன்சத்திரம் - பழநி ரோடு) தான் செல்ல வேண்டும். இதனால் தைப்பூசம் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே போக்குவரத்து தாராபுரம் ரோட்டில் திருப்பி விடப்படும். இருந்த போதிலும் ஆண்டுதோறும் விபத்துகள் நடந்து, உயிர் சேதம் ஆகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும்,பக்தர்களின் வசதிக்காகவும் 6 கோடி ரூபாய் செலவில், தனிப்பாதை அமைக்கப்படுகிறது. பாதை அமைப்பதற்கு தடையாக பல கடைகள், வீடுகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இவற்றை ஜே.சி.பி., மூலம் அகற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலையினர், போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் முத்துக்குமரன் கூறுகையில், மூலச்சத்திரத்திலிருந்து ஆயக்குடி வரை பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கப்படுகிறது. இதற்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என்றார்.