பதிவு செய்த நாள்
14
மார்
2025
08:03
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஏராளமான பெண்கள் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர். உத்தர பிரதேசத்தில் கடந்த 1978ல் மூடப்பட்ட சிவன் கோவில், 46 ஆண்டுகளுக்கு பின் நேற்று (மார்ச் 13) திறக்கப்பட்டு, ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள ஹோலி வாழ்த்துச் செய்தி: வேற்றுமையில் ஒற்றுமையை ஹோலி பண்டிகை பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது. நம் நாட்டிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வண்ணத் திருவிழா உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த மங்களகரமான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் புது உற்சாகமும், ஆற்றலும் கிடைக்கட்டும்,”என, கூறியுள்ளார். டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா, முதல்வர் ரேகா குப்தா, எதிர்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உட்பட பல்வேறு தலைவர்கள் ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ; ஹோலி பண்டிகை மற்றும் ரம்ஜான் மாத வெள்ளிக் கிழமை இரண்டும் ஒரெ நாளில் வருவதால், டில்லி மாநகர் முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 25,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல, டில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் ரோந்துப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஹோலி கூட்டங்களுக்கு பெயர் பெற்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க ட்ரோன் வாயிலாக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வியாபாரிகள் நலச் சங்கங்கள், மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசாருடன், சட்டம் – ஒழுங்கு பிரிவு போலீசாரும் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுவோர் மற்றும் சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென சிறப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.