பதிவு செய்த நாள்
08
டிச
2012
10:12
நகரி: திருப்பதி, திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், மார்கழி மாத பிறப்பை ஒட்டி, இம்மாதம், 16ம் தேதி முதல், ஜனவரி, 14 ம் தேதி வரை, ஆண்டாளின் திருப்பாவை பாசுரம், மூலவரின் முன் திருப்பள்ளி, எழுச்சி பாடலாக பாடப்படும். இதையொட்டி கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை, சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது. கடவுள் நாராயணன் தன்னை, மனைவியாக ஏற்றுக் கொள்ள பிரார்த்தித்து, ஆண்டாள் பாடியது திருப்பாவை. இந்த திருப்பாவை பாசுரங்களை, திருமலையில், மார்கழி மாதம் முழுவதும் கோவில் அர்ச்சகர்கள், மூலவரின் முன், திருப்பள்ளி எழுச்சி பாடலாக பாடி, ஐதீக முறைப்படி பூஜை செய்வர்.அதுமட்டுமின்றி, திருமலையில் கோவில் அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர், தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு, தெப்பக்குளத்தில் நீராடிய பின், நான்கு மாட வீதிகளில், ஆண்டாளின் பாசுரங்களை தமிழில் பாடி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும், சீனிவாசமங்காபுரம், அப்பளாய குண்டா, நாராயணவனம், நாகலாபுரம், நகரி, சத்திரவாடாவில் உள்ள பெருமாள் கோவில்களிலும், திருப்பள்ளி எழுச்சி பாடலாக திருப்பாவை பாசுரம் பாடப்படும்.