வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 01:03
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் சிவபெருமான் சம்ஹாரம் செய்த அஷ்ட வீரட்ட தலங்களில் 6வது ஸ்தலமான வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேகம் 2001ம் ஆண்டு நடந்தது. பின்னர் பாலாலயம் செய்யப்பட்டு நீண்ட காலம் நடந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முன்பு இன்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபாட்ட பின்னர் அசாமில் இருந்து கொண்டுவரப்பட்ட 52 அடி உயரமுள்ள கொடிமரம் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு கொடிமர பிரதிஷ்டை நடந்தது. அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.