பதிவு செய்த நாள்
17
மார்
2025
01:03
மயிலாடுதுறை; திருவாவடுதுறையில் நடந்த அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்துக்கு உள்ளாகிய பார்வதிதேவி பசு உருவம் கொண்டு பூலோகத்தின் பல்வேறு தலங்களில் சாப நிவர்த்தி வேண்டி வழிபாடு நடத்தி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்த போது, விநாயகப் பெருமான் பசு உருவம் கொண்ட அன்னையை கோமுக்தீஸ்வரர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு அன்னையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த இறைவன் தேவியின் பசு உருவத்தை நீக்கி பழைய திருவுருவுக்கு மாற்றினார். அன்னைக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றதால் இத்தலத்தில் உள்ள விநாயகர் பெருமான் அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் என்ற பெயரில் கோயிலின் தென்கிழக்கு மூலையில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் 15ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை நான்காம் காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. 10:15 மணிக்கு திருவாடுதுறை ஆதீனம் 24 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனையடுத்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.