பதிவு செய்த நாள்
17
மார்
2025
01:03
திருப்பூர்; ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாட்டில், நான்காவது வாரமான நேற்று, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில், ஆண்டுதோறும் சிறப்பு யாக பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 11ம் ஆண்டு ஹயக்ரீவர் வழிபாடு, கடந்த மாதம், 23ல் துவங்கி, நேற்று வரை, நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாற்றுமறை, மகாதீபாராதனை ஆகியன இடம்பெற்றன. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, பொது வழிபாடு நடந்தது. மாணவர் பெயர் மற்றும் நட்சத்திர பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் கையில் கட்டும் ரக்ைஷ மற்றும் வழிபாட்டு கையேடு வழங்கப்பட்டது. நான்காவது வார வழிபாடு நேற்று நடந்தது. எண்ணுாறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்; அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த, நான்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டில், 2,500க்கும் அதிகமானோர் பங்கேற்று, வழிபாடு நடத்தியுள்ளனர். நேற்றுடன், வழிபாடு நிறைவு பெற்றது.