தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பிடி மண் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 02:03
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவிற்காக பிடிமண் வழிபாடு நிகழ்ச்சியில் சுற்று வட்டார 22 கிராம மக்கள்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பங்குனி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு சென்று வருகின்றனர். இந்த வருடத்திற்கான விழா வருகிற பங்குனி 15ம் தேதி இரவு 10:20 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா பங்குனி 22ம் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவிற்கு முன்னதாக பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்று வட்டார 22 கிராம மக்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.