பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
உசிலம்பட்டி; உசிலம்பட்டி அருகே ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் திருப்பணி குறித்து பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கி.பி. 9ம் நுாற்றாண்டு முதல் 14ம் நுாற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்த பாண்டியர், சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. கோயிலில் கடந்த பிப். 10ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கோயில் சுற்றுப்பகுதிகள் சீரமைக்கப்பட்ட போது தென்பகுதியில் சிதைந்த கருங்கல் கட்டடமும், கோயில் நந்தவனத்திற்கான கிணறும் உள்ள பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்த கட்டிட கல்லில் இரண்டு வரிகள் கொண்ட கல்வெட்டுக்கள் இருந்தன. கல்வெட்டின் மற்ற பகுதிகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன.
தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்: கல்வெட்டு எழுத்துக்களின் தன்மையில் கி.பி.12ம் நுாற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக மதிப்பிடலாம். மேலும், கீழும் உள்ள வரிகள் இல்லாமல் உள்ள இந்த கல்வெட்டில் பொலி ட்டுக்குக் கொண்ட காசு பன்னிரண்டரை -பன்னிரண்டைரையுங் கொண்ட, னாம் இஞ்ஞாட்டு நாட்டோம் இத்தேவற்கு இப்பரிசு இக்காசு பன்னிரண்டரை... என குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலில் ஒரு திருப்பணி பன்னிரண்டரை காசுக்கு செய்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். என்ன திருப்பணி நடந்தது என்பது கல்வெட்டின் மேலும், கீழும் உள்ள எழுத்துக்கள் அடங்கிய கற்கள் கிடைத்தால் முழுமையான தகவல் கிடைக்கும்.
கோயிலின் உள்பகுதி கல்வெட்டுக்களில் அணையா விளக்கு எரிவதற்கு ஆடுகள், மாடுகள் வழங்கிய குறிப்புகள் உள்ள நிலையில், சுற்றுப் பிரகாரத்தில் உள்ள இந்த கல்வெட்டில் காசு பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. தொல்லியல் துறையினர் கோயில் வளாகத்தில் உதிரிக் கற்சிற்பங்களும், கட்டுமானத்திற்கு பயன்பட்ட வேலைப்பாடான கற்களும், சிதைந்து கிடக்கும் கட்டடத்தையும் ஆய்வு செய்தால் மேலும் கூடுதல் தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.