பதிவு செய்த நாள்
18
மார்
2025
04:03
காரைக்கால்; காரைக்காலில் புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் ஐக்கிய தினம் முன்னிட்டு காலை மூலவர் மற்றும் உற்சவர் காரைக்கால் அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. காரைக்காலம்மையார் அபிஷேக,ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, காரைக்காலில் அமைந்துள்ள புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் ஈசனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும் அறுபத்து மூவர்களில் பெண் நாயன்மார்களில் ஒருவருமான காரைக்கால் அம்மையார் அற்புத திருவந்தாதி, திருவிரட்டைமணி மாலை பாடியபடி தலையால் நடந்து கயிலாயமலை சென்று இறைவனிடம் ஐக்கியமான தினம் இன்று. சிறப்பு மிக்க விழாவை முன்னிட்டு இன்று மூலவர் மற்றும் உற்சவருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மகா தீபாராதனையும் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் காரைக்கால் அம்மையாருக்கு வெள்ளி கவசம் அணிவித்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.