திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2012 10:12
திற்பரப்பு : திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசனை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார்த்திகை மாத துவக்கத்தில் குறைந்த அளவில் காணப்பட்ட ஐயப்ப பக்தர்களின் வருகை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளது. மார்கழி மாத இறுதிவரை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையோர பகுதிகளில் பரவலாக பெய்து வந்த மழை கடந்த சில நாட்களாக பெய்யாததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் சிரமமின்றி குளித்து செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து அருகில் உள்ள மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். திற்பரப்பு பகுதியில் தற்போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதால் இந்த நேரத்தில் அருவி பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குறிப்பிட்ட பகுதிகளில் சோலார் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.