பதிவு செய்த நாள்
21
மார்
2025
10:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி விஜயேந்திரர், ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் நுழைவாயிலில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகன்னாதன் கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையோடு விஜயேந்திரரை வரவேற்றனர். மூலவர் ஏகாம்பரநாதரை விஜயேந்திரர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில், விஜயேந்திரருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருவதை விஜயேந்திரர் பார்வையிட்டார். தொடர்ந்து கோவில் நுழைவாயிலில் உள்ள ஒரு கருங்கல் துாணில் ஆதிசங்கரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதை தொட்டு வணங்கினார். அதே துாணில் கண்ணப்ப நாயனார், காமாட்சி அம்மன் மற்றும் மன்மதன் அம்பெய்தும் சிற்பம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் சிறப்புகளை மற்றவர்களுக்கு விளக்கினார். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரருடன், சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா. விஸ்வநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது: பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்தை குறிக்கும் ஏகாம்பரநாத சுவாமி கோவிலில், சுவாமிகள் தரிசனம் செய்துள்ளார். காற்றை குறிக்கும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு எட்டு நாட்கள் யாத்திரையாக நேற்று புறப்பட்டார். இதற்கு முன், நீர் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். நெருப்புக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையிலும் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். விரைவில் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் தரிசனம் செய்ய உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.