பதிவு செய்த நாள்
25
மார்
2025
10:03
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி மார்ச் 16-ந்தேதி செந்துறை விநாயகர் கோவிலில் வஞ்சூத்து, கரந்தமலை, ஸ்ரீரங்கம், திருமலைக்கேணி,கன்னிமார் ஆகிய கோயில்களில் இருந்து மஞ்சள் ஆடைகள் அணிந்து, குரும்பபட்டி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் காப்புக்கட்டி 8 நாட்கள் விரதம் தொடங்கினர். முன்னதாக விழாவில் ஒவ்வொரு நாளும் மாரியம்மன் மயில், சிம்மம், அன்ன வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் பக்தர்கள் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். திருவிழாவில் நேற்று மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடையை ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து நேற்று பக்தர்கள் மேளதாளம் முழங்க அக்னிசட்டி, பறவை காவடி எடுத்தும், அலகுகுத்தி, கடவுள் வேடமிட்டும் வந்து, அம்மனை வழிபட்டனர். இதற்கிடையே பூக்குழி இறங்குவதற்காக 8 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் வரிசையில் காத்திருந்தனர். மதியம் 2 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. வரிசையில் காத்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்பு தொட்டில், மாவிளக்கு எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பூக்குழியில் போடுவதற்காக விறகு கட்டைகளையும், உப்புமிளகு பொட்டலங்களையும் காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.