பதிவு செய்த நாள்
25
மார்
2025
03:03
பெங்களூரு, ஹூலிமாவு அருகில் உள்ளது ராமலிங்கேஸ்வரா குகை கோவில். குகையில் அமைந்துள்ள சிவனை, ராமலிங்கேஸ்வரா என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவிலை, ஸ்ரீஸ்ரீ பால கங்காதர சுவாமி மடத்தினர் நிர்வகித்து வருகின்றனர். நந்தி மலையில் உள்ள விஸ்வநாத் கோவிலில், சிவில் கான்ட்ராக்டராக பணியாற்றிக் கொண்டிருந்த மரியப்பா சுவாமிகள் அருகில் வந்த யோகி ஒருவர், ‘பெங்களூரில் குகை ஒன்றில், முனிவர் ஒருவர், தவம் செய்து வருகிறார். அவரை கண்டுபிடி’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
முனிவர்; இதையடுத்து மரியப்பாவும், பல இடங்களில் தேடி, ஹூலிமாவில் குகை ஒன்றில் முனிவர் தவம் செய்வதாக அறிந்து, அங்கு சென்று பார்த்தார். அங்கு ‘ஸ்ரீராமானந்த் சுவாமிகள்’ தவம் செய்து கொண்டிருந்தார். 12 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீராமானந்த சுவாமிகள், ஜீவசமாதி அடைந்தார். இதையடுத்து அங்கு கோவில் எழுப்பப்பட்டது. இந்திய தொல்லியல் துறையினரின் கூற்றுப்படி, இந்த குகை, 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இக்கோவில் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்கின்றனர். அம்ராபுரா என்ற இப்பகுதி நாளடைவில் ‘ஹூலிமாவு’ (புளிப்பு மாங்காய்) என்று மாறியது. இந்த குகைக்குள் நீங்கள் குனிந்தபடி தான் செல்ல வேண்டும். இங்குள்ள ரகசிய சுரங்கப்பாதை, நந்தி மலை வரை செல்கிறது என்கின்றனர். ஆனாலும், அந்த சுரங்கப்பாதை மூடப் பட்டுள்ளது.
தியான மண்டபம்; இங்கு சிவன் – பார்வதி, ராஜராஜேஸ்வரி, விநாயகர், ராமர் – சீதை, லட்சுமணர், ஹனுமன், அக்னி ஆகியோரின் விக்ரஹங்கள் உள்ளன. குகைக்குள் நுழைந்தவுடன், வலது புறத்தில் தியான மண்டபம் அமைந்துள்ளது. இங்கு குறைந்தபட்சம் 100 பேர் தியானம் செய்யலாம். அந்தளவுக்கு விசாலமானதாக உள்ளது. இங்கு தினமும் யோகா வகுப்பு நடக்கிறது. கருவறைக்கு அருகில் முக்கோண வடிவில், ஸ்ரீராமானந்த சுவாமிகளின் சமாதி அமைந்து உள்ளது. இதன் அருகில் நவக்கிரஹ சன்னிதியும் உள்ளது.
நடை திறப்பு; தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு அனுமதி இலவசம். கோவிலில் இருந்து 11 கி.மீ., துாரத்தில் பன்னரகட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
எப்படி செல்வது?; பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் இக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து எட்டு நிமிடங்கள் நடந்தால், குகை கோவிலை அடையலாம்.