சென்னை; மயிலாப்பூரில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேக நட்சத்திர நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான கும்பாபிஷேக நட்சத்திர நாள் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், 1008 சங்குஸ்தாபனம் நடந்தது. திருவோண கும்பாபிஷேக திருநட்சத்திரமான நேற்று காலை, யாகசாலை வளர்த்து பூஜைகள் நடந்தன. பூர்ணஹுதி, யாத்ரா தானம் முடிந்த பின், பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், பழங்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, 1008 வலம்புரி சங்கால் அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு பஞ்சமூர்த்தி திருவீதி புறப்பாடு நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.