பதிவு செய்த நாள்
27
மார்
2025
10:03
சென்னை: தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில், 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன, என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், கோவில்கள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவருக்கு பதிலளித்த, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேட்டூர் ஞான தண்டாயுதபாணி கோவிலுக்கு, 1.20 கோடி ரூபாய் செலவில், மூன்று நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஆணையருடைய பொது நல நிதியை பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. அதிக வருவாய் உள்ள வேறு கோவிலில் இருந்து கடனாக பெற்று, ராஜகோபுரம் அமைக்கும் பணி வெகு விரைவில் துவங்கப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி, 350 ராஜகோபுரங்களுக்கான மராமத்து பணிகள், 83 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. மேட்டூர், மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகள், 4 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. ஜூலை மாதம் கும்பாபிேஷகம் நடத்தப்படும், என்றார்.