பதிவு செய்த நாள்
27
மார்
2025
11:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இரண்டாம் நாள், காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உலா வந்தார். மூன்றாம் நாள் காலை கருடசேவை உத்சவமும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடந்தது. நான்காம் நாள், நேற்று முன்தினம் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று காலை தங்க பல்லக்கில், நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்திலும் யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வந்தார். ஆறாம் நாள், இன்று காலை சப்பரத்திலும், இரவு யானை வாகன உத்சவமும் நடக்கிறது. பிரம்மோத்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் நாளை, காலை 7:40 மணிக்கு நடக்கிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் யதோக்தகாரி பெருமாள், முக்கிய வீதி வழியாக பவனி வருகிறார். வரும் 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.