பதிவு செய்த நாள்
27
மார்
2025
04:03
ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் அம்ருத்2.0 திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்களில் ஒருங்கிணைந்த முழுமை வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவாகமக்கள் வசிக்கும் 51 நகரங்களில், அம்ரூத் 2.0 திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். இதில் ஸ்ரீவில்லிபுத்துார், பழநி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய 7 கோயில் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு அடுத்து வரும் 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு தேவையான ரோடு, வாறுகால், குடிநீர், பூங்காக்கள், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான முழுமை திட்டம் உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கோயில் நகரங்களில், நகராட்சி எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளை இத்திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு நகர மற்றும் கிராம திட்டமிடல் திட்டம் 1971ன் படி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த முழுமையான திட்டம் தயாரிக்கும் பணியில் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர்தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, போக்குவரத்து துறை, உள்ளாட்சித் துறை உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.