பதிவு செய்த நாள்
28
மார்
2025
10:03
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜரை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரிய நிகழ்வாக மூன்று நாட்கள் சந்தனம் களையப்பட்ட நிலையில் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற உலகின் முதல் சிவன் கோயில் என கருதப்படும் மங்களநாதர் சுவாமி – மங்களேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஏப்.,4 காலை 9:00 முதல் 10:20மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு பிரகாரத்தின் அர்த்த, அலங்கார மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள், மரகத நடராஜர் உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணிகள் முடிந்துள்ளன. பிப். 16 யாகசாலை பூஜை கூடம் அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டு பல்வேறு வடிவங்களில் 101 குண்டங்களுடன் யாகசாலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. மார்ச் 31ல் துவங்கி ஆறு கால யாகசாலை பூஜைகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 2010ல் கும்பாபிஷேகம் நடந்த போது பச்சை மரகத நடராஜருக்கு சாற்றப்பட்ட சந்தனம் படி களையப்பட்டு மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போன்று ஏப்.,1 மாலை 5:00 மணிக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏப்., 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களுக்கு சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை தரிசிக்கலாம்.
பொதுவாக மார்கழியில் வரக்கூடிய ஆருத்ரா தரிசனத்தில் மட்டுமே ஆண்டிற்கு ஒருமுறை சந்தனம் படி களைதல் நடக்கும். தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனம் படி களையப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் அபூர்வ நடராஜரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மரகத நடராஜர் தரிசனம்; இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோயில் உத்தரகோசமங்கை தலம். ‘உத்திரம்’ என்பது ‘உபதேசம்’ என்றும், ‘கோசம்’ என்ப்து ‘ரகசியம்’ என்றும் பொருள்படும். பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை ரகசியமாக உபதேசம் செய்ததால், இத்தலம் உத்திரகோசமங்கை எனப் பெயர் பெற்றது.
இங்குள்ள நடராஜர் மரகதத்தால் ஆனவர். ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பில் இருக்கும் இவரை, மார்கழி திருவாதிரையன்று மட்டும் மரகத நடராஜராக தரிசிக்கலாம். உத்திரகோசமங்கையில் நடைபெறும் குடமுழுக்கை முன்னிட்டு ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் மரகத நடராஜர் வரும் 1ம் தேதி மாலை முதல் ஏப் 4ம் தேதி மாலை வரை சந்தனகாப்பு கலைக்கப்பட்டு மரகதமேனியாக காட்சியளிக்க உள்ளார்.