பதிவு செய்த நாள்
29
மார்
2025
02:03
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இக்கோயிலில் மார்ச் 18 அன்று கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் காலை அம்மன் மண்டகப்படி எழுந்தருளலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூக்குழி திருவிழா இன்று விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு அமாவாசை நாளான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி பெரிய மாரியம்மன், பட்டத்தரசி அம்மன், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர் உட்பட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து ரத வீதி சுற்றி வந்தனர். மதியம் 12:50 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வீதியுலா துவங்கியது. இதனையடுத்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும், கொதிக்கும் அனலையும் தாங்கி தீமிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (மார்ச் 30) காலை 11:00 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.