பங்குனி அமாவாசை; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2025 05:03
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழக மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு நாளும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். அம்மன் பச்சை பட்டினி விரதம் என்பதால் இளநீர், மாவு, நீர் மோர் வணக்கம் உள்ளிட்டவை படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் மேற்பார்வையில், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.