பதிவு செய்த நாள்
31
மார்
2025
11:03
சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவிற்காக நாளை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, ஆராட்டு, சித்திரை மாத பூஜைகளை முன்னிட்டு 18 நாட்கள் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். பங்குனி ஆராட்டு உற்சவத்திற்காக 11 நாட்கள், உத்திர பூஜைக்காக 2 நாட்கள், சித்திரை மாத பூஜைக்காக 5 நாட்கள் என 18 நாட்கள் சபரிமலை நடை திறந்திருக்கும். நாளை ஏப்ரல் 1ம் தேதி பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காக நடை திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2ம் தேதி கொடி ஏற்றமும், 10ம் தேதி பள்ளி வேட்டையும் நடைபெறும். ஆராட்டு விழாவை முன்னிட்டு 11ம் தேதி சுவாமி ஐயப்பன் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு எழுந்தருள்வார். பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
பின் பம்பை கன்னிமூல கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக மாலை வரை அருள்பாலிப்பார். பின் அன்றிரவு சன்னிதானம் திரும்பும் சுவாமிக்கு இரண்டு நாட்கள் உத்திர திருவிழா நடைபெறும் பிறகு சம்பிரதாயமாக நடை அடைத்து சித்திரை மாத பூஜைக்காக 5 நாட்கள் நடை திறந்திருக்கும். ஏப்ரல் 14ஆம் தேதி விசு கனி தரிசனம், மேல் சாந்தி பக்தர்களுக்கு கைநீட்டு வழங்கும் வைபவம் நடைபெறும் வழக்கமான பூஜைகள், படி பூஜை நடைபெறும் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும் பின்பு வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை அடைக்கப்படும் சபரிமலை தரிசனத்திற்காக பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது அவசியம்.