அஷ்ட வீரட்ட தலமான வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் யாகசாலை பிரவேச நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 01:04
மயிலாடுதுறை; யானை வடிவ கஜாசுரனை சிவபெருமான் வதம் செய்த அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பிரவேசம், முளைப்பாரி ஊர்வலத்துடன் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளங் கிளை நாயகி சமேத கிர்த்திவாசன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானை வடிவிலான கஜாசுரனை இத்தளத்தில் சிவபெருமான் வீரட்டேஸ்வரராக எழுந்தருளி சம்ஹாரம் செய்து தோலை கிழித்து இடுப்பில் ஆடையாக அணிந்ததால் அட்ட வீரட்ட தலங்களில் 6வது ஸ்தலமாக விளங்கி வருகிறது. தேவாரப் பாடல்கள் மற்றும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் 3 யானைகள் மேல் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதனை முன்னிட்டு பசு குதிரை யானை இவற்றிற்கு முறையே கோபூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை ஆகியவை செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்திருந்தனர். தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இந்து புரட்சி முன்னணி மாவட்ட தலைவர் குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துக்குமார், தக்கார் ரவிச்சந்திரன், ஆய்வாளர் ஆரோக்கிய மதன் ஆகியோர் செய்திருந்தனர்.