பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
01:04
கோவை; கொங்குநாட்டில் பிரசித்தி பெற்ற, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, 2 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்குநாட்டில் அமைந்திருக்கும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக அழைக்கப்படுகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக துவங்கியுள்ளது. கோபுர விமானங்களில் கலசங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. 73 குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டிருக்கிறது; முதற்கால யாக வேள்வி இன்று (ஏப்., 1) துவங்குகிறது. வரும், 4ம் தேதி காலை, 8:30 முதல், 9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
விழா ஏற்பாடுகள் தொடர்பாக, அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவுக்கு, 5.83 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். கும்பாபிஷேக விழாவுக்கு, 2 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக செல்வோர் பார்ப்பதற்கு தனி வழியும், வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்படும் பாஸ் வழியாக, வருவோருக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எந்த வாகனமும் மலை மேல் செல்ல அனுமதி கிடையாது. பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவர். கோவில் மண்டபங்களின் ஸ்திரத்தன்மையை, பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்கின்றனர். அதன் அடிப்படையில், மண்டபங்களின் மேற்பரப்பில் நின்று, கும்பாபிஷேகத்தை காண, 750 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுற்றுப்பிரகாரங்களில், 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஹிந்து சமய அறநிலையத்துறையில் இருந்து, பாஸ் வழங்கப்படும்.
நேரடி ஒளிபரப்பு உண்டு; ஏப்., 4ம் தேதி காலை, 8:30 முதல், 9:30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும். எட்டு இடங்களில் எல்.இ.டி., திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ‘ட்ரோன்’ மூலமாக பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்படும். அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக வருவோர், ஒவ்வொரு ‘பேட்ச்’சாக தரிசனத்துக்கு அனுப்பப்படுவர்; ஒரு பேட்ச்சில் 2,000 பேர் இருப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.
உணவின் தரம் சோதனை; நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். அவற்றின் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அடிவாரத்தில் இருந்து மலை வரை, 20 இடங்களில் தண்ணீர் டேங்க் வைக்கப்படும். 60 இடங்களில் மொபைல் டாய்லெட் அமைக்கப்படும். குடிநீர், மோர், பிஸ்கட் வழங்கப்படும். மினி மருத்துவமனை செயல்படும். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சுகாதாரப் பணியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் 200 பேர் ஈடுபடுவர். வாகனங்கள் நிறுத்த தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.