ராவணனுக்கு திருமணம் நடந்த உத்தரகோசமங்கை கோயில்; சிற்பங்கள் கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 03:04
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவன் கோயிலாகும். புராண இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். இங்கு இலங்கை மன்னன் ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் நடந்த இடமாக புராண வரலாறு கூறுகிறது. மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள ராஜகோபுரம் முன்பு முடிவடையாத நிலையில் இருந்தது. அதன் பிறகு 2010 ல் புதியதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்பொழுது மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள ராஜகோபுரம் 90 அடி உயரத்திற்கு உயர்த்தி கட்டப்பட்டு அவற்றில் பல புராண செய்திகளை விளக்கக்கூடிய திருஉருவச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மங்கள நாதர் சன்னதி முன்புள்ள ராஜகோபுரம் 120 அடி உயரம் கொண்டதாகும்.
கோயில் குருக்கள் கூறியதாவது: இலங்கை மன்னன் ராவணனுக்கும் அவரது மனைவியான மண்டோதரிக்கும் இங்குள்ள சிவன் கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்த புராண செய்திகள் இக்கோயிலில் உள்ளன. அதை விளக்கும் விதமாக பத்து தலை கொண்ட இராவணனின் சிற்பமும் மண்டோதரியின் திருக்கல்யாண வைபோகம் முன் முகப்பில் பிரதானமாக அமைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண உற்ஸவ காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புராண இதிகாசத்துடன் தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளும் ஒரு மாதத்திற்கு முன்பாக சுதை சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசித்து செல்கின்றனர்.