பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
04:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று கிருத்திகையும் வந்ததால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள், ரிஷி கோபுரம் நுழைவாயில் பகுதியை மறித்து கூட்டமாக நின்று மூலவரை தரிசனம் செய்ததால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இதனால், தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களும், வெளியில் இருந்து கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்களும் நெரிசலில் சிக்கினர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர், கர்ப்பிணிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். எனவே, கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் நாட்களான செவ்வாய், பரணி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பக்தர்களை வரிசைப்படுத்த போதுமான ஊழியர்களை நியமிக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: ரிஷி கோபுரம் நுழைவாயில் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க, விசேஷ நாட்களில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் வரிசையில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.