பங்குனி உத்திர திருவிழா, சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 06:04
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் 18ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ கோவில் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடி பட்டத்துக்கான பூஜை நடைபெற்றது தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் பூஜைகளை நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். காலை 9:45 முதல் 10:45 மணிக்குள் கொடியேற்று நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். நாளை முதல் ஒன்பதாம் நாள் விழாவான 10-ம் தேதி வரை மதியம் உற்சவ பலி நடைபெறும்.பத்தாம் தேதி இரவு சரங்குத்தியியில் பள்ளி வேட்டையும் 11 -ம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். 12ஆம் தேதி முதல் சித்திரை விசு பூஜைகள் நடைபெறும். 14 -ம் தேதி காலையில் சித்திரை விஷுவையொட்டி கனி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்குதலும் நடைபெறுகிறது. 18 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.