பதிவு செய்த நாள்
02
ஏப்
2025
03:04
கழுகுமலை; கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாக்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, கால சாந்தி பூஜை, உதய மார்த்தாண்ட பூஜை, சுப்பிரமணியர் பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னர் மூலவர் கழுகாசல மூர்த்தி சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் கழுகாசல மூர்த்தி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டம் ஏப்ரல் 10ல் நடக்கிறது. 11ம் தேதி தீர்த்தவாரி, தபசு காட்சி நடக்கிறது. 12ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.