உத்தரகோசமங்கை கோயிலில் வெயிலால் பக்தர்கள் தவிப்பு தரை விரிப்பு தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2025 11:04
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மரகத நடராஜரை தரிசிக்க மக்கள் கோயிலுக்கு வெளியே கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் நிழற்பந்தல் அமைக்கவும், வெப்பத்தை தாங்கும் தரை விரிப்புகளை விரிக்கவும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மரகத நடராஜர் கோயில் கும்பாபிேஷகம் நாளை(ஏப்.4) காலை 9:00 முதல் 10:20 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி மூன்று நாட்கள் மரகத நடராஜரை சந்தனக்காப்பு களையப்பட்ட நிலையில் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் குவியும் நிலையில் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் நிற்பதால் கால்களை தரையில் வைக்க முடியாமல் தவிக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பல இடங்களில் தடுப்பு வேலி கம்பிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் சமஸ்தான ஊழியர்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் கூறியதாவது: உத்தரகோசமங்கை ராஜகோபுரத்தின் முன்பாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட இடத்தில் இருந்து தார் சாலை செல்லும் வழியில் வெறும் பாதங்களுடன் நிற்பது சிரமமாக உள்ளது. பக்தர்களின் வசதிக்காக வெயிலை தாங்க கூடிய விரிப்புகள் அமைக்கப்பட வேண்டும். நிழற்பந்தல் நிறுவ வேண்டும். குடிநீர், மின்விசிறி ஏற்படுத்த அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.