பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
12:04
பல்லடம்; வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் ஒரே இடம் கோவில்கள் மட்டுமே என், பல்லடம் அருகே நடந்த கோவில் விழாவில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை வழங்கினார்.
பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் மாரியம்மன் கோவில் உச்சாட்டு பொங்கல் விழா மார்ச் 25 அன்று அம்மன் அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி கம்பம் சுற்றி ஆடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருக்கல்யாணத்தை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: இறைவனை வழிபட தினசரி ஒரு மூன்று நிமிடமாவது ஒதுக்குங்கள். துன்பப்பட்டு, துயரப்பட்டு, அழுது புலம்பினால்தான் கடவுளை அடைய முடியும். கடவுள் என்பவர், காசு கொடுத்தால் வாங்கக்கூடிய பொருள் அல்ல. சக்தி இருந்தால் புத்தி மாறாது. இப்படிப்பட்ட அன்னை பராசக்தியிடம் வேண்டியதை பெறலாம். மலை ஏறி இறைவனை காண வேண்டும் என்றால் கஷ்டப்பட்டது தான் ஆக வேண்டும். இவ்வாறு கடவுளைக் காண வேண்டும் என்றால் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். நமது முன்னோர்களான நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் சித்தர்கள் உள்ளிட்டோர் நமக்கு இதைத்தான் அறிவுறுத்தி சென்றுள்ளனர். நிலம் செழிக்க, உயிர்கள் வாழ, மழை பொழிய வேண்டும். மழை பொழிந்தால் தான் பயிர்கள் செழிக்கும். வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கக்கூடிய ஒரே இடம் கோவில்கள் மட்டுமே. இப்படிப்பட்ட கோவில்களுக்கு சென்றால், நமக்காகவும், குடும்பத்துக்காகவும், உற்றார் உறவினர்களுக்காக மட்டுமின்றி, உலக நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, பூ, பழங்கள், புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்புகள், பலகாரங்கள் என, அனைத்து சீர்வரிசைகளும் அம்மனுக்கு கொண்டுவரப்பட்டு, திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. சிறப்பு வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, திருமாங்கல்யம் அணிவித்தல் மற்றும் மாலை மாற்றும் நிகழ்வு ஆகியவை நடந்தன. இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.