பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் நேற்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று காலை 11:00 மணிக்கு கோயிலில் தங்க கொடி மரத்தில் சிங்ககொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்பாள் வெள்ளி சிங்க வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது பள்ளி குழந்தைகள், மாணவர்கள் பல்வேறு சுவாமிகளின் வேடமிட்டும், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். தினமும் அம்மன் அன்னம், ரிஷபம், யானை, காமதேனு, குதிரை வாகனங்களில் உலா வருகிறார். ஏப்., 6 மாலை 5:00 மணிக்கு வண்டி மாகாளி உற்சவம் நடக்கிறது. ஏப்., 11 காலை, மதியம் அக்னி சட்டி எடுத்தல், இரவு 8:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காலத்தில் மின் தீப தேரில் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். மறுநாள் காலை 4:00 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் வைகையில் எழுந்தருளுவார். ஏப்., 13 காலை தொடங்கி வைகையில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஷ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.