பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
11:04
போடி; போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் மலைமேல் அமைந்துள்ளது. பரமசிவன் சுயம்பு மூர்த்தியாகவும், வலது பக்கம் லட்சுமி நாராயணன், இடது பக்கம் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தனியாக வீற்றிருக்கிறார். விநாயகர், ஆஞ்சநேயர், லாட சன்னாசி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. சித்திரை திருவிழா, கார்த்திகை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டு களுக்கு முன்பு நடந்தது. தற்போது புனரமைக்கப்பட்டு மண்டபத்துடன் பெரிய அளவிலான ஆஞ்சநேயர், முன் நுழைவாயிலில் சிவன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக ஹோமம் கும்பாபிஷேக யாக குண்டலக ஹோமம் நடைபெற்றது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாக சாலைகளில் வைத்து பூஜை செய்தனர். போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தனர்.
நேற்று காலை கோபுர கலசத்திற்கு விஸ்வநாத சிவாச்சியார் புனிதநீர் ஊற்றினார். அதன்பின் சிவன், லட்சுமி நாராயணன், முருகன், ஆஞ்சநேயர், லாட சன்னாசிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர். விழாவில் தொழிலதிபர் பரமசிவம் அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேதுராம், போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை செயலாளர் பேச்சிமுத்து, போடி தி.மு.க., நகர செயலாளர் புருஷோத்தமன், தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, தேனி பிளைவுட் உரிமையாளர் ராஜசேகரன், போடி ஜனனி அடகு கடை உரிமையாளர் சந்தோஷ்குமார், கர்ணா ஓட்டல் உரிமையாளர் கயிலை பொன் கலைச்செல்வன், சந்தியாஸ் மஹால் உரிமையாளர் சம்பத் சந்தியா, பொம்மி மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் பச்சையப்பன், கிருஷ்ணவேணி, பொன்னையா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், தாஸ் பாரடைஸ் உரிமையாளர் முருகதாஸ், சிங்காரவேலன் பழனி பாயாத்திரை பேரவை குருநாதர் சுருளிவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.