கச்சிராயபாளையம்; கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கல்யாண முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவிநாயகர், சிவன் மற்றும் முருகன் பிரகாரங்களில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் காலை கோபுர கலசத்திற்கு தானியம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை ஸ்ரீ விநாயகர் வழிபாடு அனுக்ஞை, மகா சங்கல்யம், வாஸ்து சாந்தி, பிரவேஷபலி மற்றும் முதலாம் கால யாகபூஜைகள் நடத்தி கலசம் வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை ஸ்ரீ விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகவேள்வி, நாடி சந்தானம், மகாபூரணாஹுதி, யாத்ராதானம் போன்ற பூஜைகள் செய்யப்பட்டு கோவில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.