பதிவு செய்த நாள்
11
டிச
2012
11:12
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் அருகே, அனாதையாக விடப்பட்ட, நான்கு மாத பெண் குழந்தை, நேர்த்திக் கடனாக செலுத்தப் பட்டிருக்கலாம் என்ற தகவலால், பரபரப்பு நிலவுகிறது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணியளவில், கோவிலின் மாவிளக்கு மண்டபத்தில் உள்ள உண்டியல் முன், பிறந்து நான்கு மாதமே ஆன, ஒரு பெண் குழந்தை, அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை, கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் ஒப்படைத்தனர்.கோவிலில் பலமுறை, மைக் மூலம் அறிவிப்பு செய்தும், யாரும் குழந்தையை பெற முன்வரவில்லை. இதையடுத்து, சமயபுரம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்; மருத்துவமனையிலேயே குழந்தை பராமரிக்கப்படுகிறது. சமயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்."நீண்ட நாள் குழந்தை இல்லாத தம்பதியர், குழந்தை பிறந்தால், அம்மனுக்கே குழந்தையை நேர்ந்து விடுவதாக, வேண்டுதல் செய்வர். குழந்தை பிறந்தவுடன், அம்மனிடம் நேர்ந்து விட்டு, மீண்டும் குழந்தையை தத்து வாங்கிக் கொள்வர். இந்த நடைமுறை தெரியாதவர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக குழந்தையை உண்டியல் அருகே விட்டுச் சென்றிருக்கலாம் என, சில பக்தர்கள் தெரிவித்தனர்.