அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, முன்னதாக குதிரையுடன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள படைக்கல சாவடிக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பரிவார மூர்த்திகளான கன்னிமார் - கருப்பராயன், முனீஸ்வரனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின்னர் அதிகாலை 5:00 மணிக்கு கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து, தலைமை பூசாரிகள் விநாயக மூர்த்தி , மனோகர் ஆகியோர் கை குண்டம் வாரி இறைத்து குண்டம் இறங்கி குண்டம் இறங்குவதை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, வீரமக்கள் மஞ்சள் உடை உடுத்தி மஞ்சள் நீர் கிணற்றில் குளித்து, பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் குண்டம் இறங்கினர். காலை 5:00 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி 11:00 மணி வரை நடைப்பெற்றது. தொடர்ந்து, குண்டம் மூடப்பட்டது. மூடப்பட்ட குண்டத்தின் மீது பக்தர்கள் நேர்த்திகடனாக உப்பு, மிளகு, கருப்பு போட்டு வழிபட்டனர். குண்டம் இறங்கி பாதிக்கப்பட்ட வீர மக்களுக்கு பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பிலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு திருப்பூர், அவிநாசி, கோபி, நம்பியூர், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இரண்டு ஏடி.எஸ்.பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.