பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
03:04
புதுச்சேரி; இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி– திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டி அடுத்த இரும்பை குபேரன் நகரில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, ராஜமாதங்கி, வாராஹி விக்ரகங்கள் நிர்மாணிக்கப்பட்டது. அதையொட்டி, மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை, கடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. 4ம் தேதி யாகசாலை பூஜை துவங்கி தினசரி பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், யாத்ரா ஹோமத்தை தொடர்ந்து கலச புறப்பாடு நடந்தது. காலை 9:20 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார சுவாமிகள் சன்னதி விமானங்களுக்கும், 9:40 மணிக்கு பாலா திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், 9:50 மணிக்கு ராஜ மாதங்கி அம்பாள், 10:00 மணிக்கு வாராஹி அம்பாள், 10:05 மணிக்கு பால பைரவருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், உபசாரத்தை தொடர்ந்து கன்யா பூஜை, தருணி பூஜை, சுவாஷினி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்புறப்பாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.