திருச்சுழி; திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு திருமேனிநாதர் - துணைமாலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. திருமேனி நாதர் கோயிலில் பங்குனி பொங்கல் விழா ஏப்.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு 7.45 மணிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், துணைமாலை அம்மன் இளம் சிவப்பு நிறத்திலான பட்டாடை உடுத்தியிருந்தார். சுவாமி, அம்பாள் மாலை மாற்றிட திருக்கல்யாணம் நடந்தது. காண வந்த பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தங்கள் மாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனர். அதன்பின், கௌசீக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்தல் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.