பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
10:04
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாயொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. காலை, 8:30 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு பால்குடம் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 10:00 மணிக்கு, உற்சவம் மூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பகல், 12:00 மணிக்கு, காமதேனு வாகனத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பங்குனி உத்திரத்தை ஒட்டி, நேற்றுமுன்தினம் இரவு முதலே, கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்தடைந்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க, மலை மேல் உள்ள கோவிலுக்கு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. 130க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பேரூரில் நடராஜர் தரிசன காட்சி; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த, 2ம் தேதி, கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத்தேர் திருவிழா துவங்கியது.பங்குனி உத்திரத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று, பங்குனி உத்திரத்தை ஒட்டி, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, யாகசாலை பூஜை, மூலவர் கால சந்தி அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 4:30 மணிக்கு, கனக சபை மண்டபத்தில், நடராஜர் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு, சந்தனம், குங்குமம், திருநீறு, இளநீர், தேன் உள்ளிட்டவைகள் கொண்டு, திருமஞ்சனம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, பங்குனி உத்திர தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு, நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள், ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு, 8:00 மணிக்கு, யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைந்தது.