பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
11:04
குன்றத்துார்; குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் மற்றும் உத்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் கொடி மரம் முன் 110 கிலோ சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகனை பக்தர்கள் வழிபட்டனர். l ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமி, உத்சவர் கோடையாண்டவர் முருகபெருமானுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் முருகபெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரமும், வள்ளி, தெய்வானை குங்கும காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகபெருமான் மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.