பதிவு செய்த நாள்
14
ஏப்
2025
03:04
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு அஸ்திரத்தேவருக்கும், அங்குசத்தேவருக்கும் தீர்த்தவாரி நடந்தது.
நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறந்து திருவனந்தல் பூஜைகள் நடந்தன. பின்னர் மூலவர் தங்கக் கவசத்திலும், உற்ஸவர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் காலை 9:20 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் கோயிலிலிருந்து புறப்பாடாகி கோயில் குளப்படித்துறையில் எழுந்தருளினர். தொடர்ந்து தலைமைக்குருக்கள் பிச்சைசிவாச்சார்யர் உள்ளிட்ட சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களுடன் பூஜைகள் நடத்தினர். சோமசுந்தரம் குருக்களால் அஸ்திரத்தேவருக்கும், அங்குசத்தேவருக்கும் திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்ரீதர் குருக்கள் கோயில் குளத்தில் சிவனின் பிரதிநிதியான அஸ்திரத் தேவருக்கும், விநாயகரின் பிரதிநிதியான அங்குசத்தேவருக்கும் மும்முறை தீர்த்தத்தில் மூழ்கி தீர்த்தவாரி நடத்தினார். தீபாராதனை நடந்து கோயில் புறப்பாடாகியது. குளத்தைச் சுற்றி நின்று பக்தர்கள் தீர்த்தவாரியை தரிசித்தனர். மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு மூலவர் கற்பகவிநாயகர்,மருதீசர் சன்னதி முன்பாக, ராசி விதான மண்டலத்தின் கீழ் சிவாச்சார்யரால் விசுவாவசு ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர்,அம்பாள், மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்தனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்பன்,நச்சாந்துபட்டி மு.குமரப்பன் ஆகியோர் செய்தனர்.