காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயில்களில் ஒன்றான முத்தியாலம்மன் கோயிலில் ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறும் முத்யாலம்மன் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கி மூன்று நாட்கள் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
காளஹஸ்தி முத்தியாலம்மன் கோயிலின் மூன்று நாள் திருவிழாவைக்க காண நகரில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வரும் பக்தர்கள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதோடு அம்மனின் சன்னதிக்கு எதிரில் பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு வழிபாடு நடத்துகின்றனர். திருவிழாவை முன்னிட்டு, கோயில் பசுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு மலர் அலங்காரங்களால் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. விழாவில் காளஹஸ்தி சிவன் கோயிலிலிருந்து சீர் வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு, கோயில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறைப்படி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.