பதிவு செய்த நாள்
17
ஏப்
2025
01:04
கோவை; கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா துவங்கியுள்ளது; இன்று (ஏப்., 17) மாலை, 6:30 மணிக்கு அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவை – அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகே தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்வாண்டு திருவிழா கொடியேற்றம், பூச்சாட்டுடன் துவங்கியுள்ளது. இன்று (ஏப்., 17) மாலை, 6:30 மணிக்கு அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஏப்., 18) மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை திருவிளக்கு பூஜை, வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை மறுதினம் (ஏப்., 19) இரவு, 8:00 மணிக்கு குதிரை வாகனத்திலும், ஏப்., 20 (ஞாயிறு) இரவு, 8:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், அம்மன் வீதியுலா வருகிறார். வரும், 21ம் தேதி மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை திருவிளக்கு பூஜை, அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி மாலை, 6:30 முதல் இரவு, 8:00 மணி வரை திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி (புதன்) காலை, 7:00 மணிக்கு சக்தி கரகம், அக்னிச்சட்டி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெறும். வரும், 24ம் தேதி (வியாழன்) காலை, 9:00க்கு மகா அபிஷேகம், 11:00 மணிக்கு மஞ்சள் நீர், மாலை, 6:30க்கு கொடி இறக்குதல், இரவு, 8:00 மணிக்கு கம்பம் கலைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். 25ம் தேதி (வெள்ளி) காலை, 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை தமிழில் லட்சார்ச்சனை செய்யப்படும். 27ம் தேதி (ஞாயிறு) காலை, 7:00 மணிக்கு சங்கபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு வசந்த உற்சவம் நடைபெறும். தினமும் காலை, 7:00க்கு அபிஷேக பூஜை, மாலை, 4:00க்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். காலை, மாலை இரு வேளைகளிலும் யாக சாலை பூஜைகள் நடைபெறும். தினமும் அன்னதானம் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பேபிஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் நாகலட்சுமி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.