பதிவு செய்த நாள்
18
ஏப்
2025
11:04
சென்னை; கோவில் திருப்பணிகளுக்கு பக்தர்களிடமிருந்து, 1,320 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, ஹிந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து, அவர் பேசியதாவது: அறநிலையத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகளுக்கு, பக்தர்களிடம் இருந்து, 1,320 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது. கடந்த நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், 23 ராமர் கோவில்கள் உட்பட, இதுவரை 2,820 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டும். கடந்த நான்காண்டுகளில்,11,666 கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் அன்னதான திட்டத்தால், ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்கள் பசியாறுகின்றனர். இதற்காக ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
ஆன்மிக பயணத் திட்டத்தில் இதுவரை, 4,953 பக்தர்கள் பயனடைந்துள்ளனர். கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தால், 1,074 கிலோ சுத்த தங்கம் கிடைத்துள்ளது. 19 கோவில்களில், 1,770 கோடி ரூபாயில் உட்கட்டமைப்பு, பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பிற மாநிலங்களுக்கு ஒரு சில கோவில்கள் தான் அடையாளமாக திகழ்கின்றன. இந்த பெருந்திட்ட வரைவுப் பணிகள் முடியும்போது, 19 கோவில்களும் தமிழகத்தின் அடையாளமாக திகழும். இத்திட்டத்தில்,இந்த ஆண்டு நான்கு கோவில்களை சேர்க்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பணி; இவ்வாண்டு 926 கோடி ரூபாயில், 2,090 கோவில்களில், 2,114 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தைத்திருநாளில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 19,000 கோவில்களுக்கு, 15 கோடி ரூபாயில் பூஜை உபகரணங்கள் வழங்கப்படும். கோவில்களில், 70 ஓதுவார் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். சிறுவாபுரி, பாலசுப்பிரமணியசுவாமி கோவில் சாலை விரிவாக்கத்திற்கு, 67 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்படும். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் மாற்று மலைப் பாதைக்கு, 57.50 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்படும். – அமைச்சர் சேகர்பாபு.